வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் கண்டனம்…!

பதவியாசை, பணத்தாசை,பிடித்து அலைபவர்களிற்கு எமது பாசப்போராட்டம் புரியப்போவதில்லை என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான சிறிலங்கா அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது.அது தொடர்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர். அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது.
இறுதி யுத்தம் 2009 ஆம் ஆண்டு ,மே மாதம் மெளனிக்கப்பட்டதன் பின் இலங்கை இராணுவத்தின்  கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகளையும், தாமாகவே எம் கண் முன்னே இலங்கை அரச படைகளிடம்  சரணடைந்த உறவுகளையும், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட உறவுகளையும் விடுவிக்ககோரி ஆரம்பிக்கப்பட்ட எமது போராட்டம் தற்போது 1847 ஆவது நாட்களாக, நூற்றுக்கு மேற்பட்ட சக போராட்ட  உறவுகளை இழந்த நிலையிலும், பல வகையான அச்சுறுத்தல்கள் மத்தியிலும், சர்வதேச நீதி கோரிய படி தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இனவழிப்பில் ஈடுபட்டவர்களுக்கு, அவர்களின் கொடுஞ் செயல்களுக்கு பரிசாக பன்னாட்டு தூதுவராலயங்களில் ராஜதந்திரிகளாக நியமித்து மகிழும் கலாச்சாரமுள்ள நாடு சிறிலங்கா என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு  உயிர்தப்பி வந்தவர்களின் சாட்சியம் காரணமாக “சுனில்   ரட்னாயக்கா” என்ற கொலைகாரனுக்கு மரணதண்டனை வழங்கும்  நிலையொன்று  ஏற்பட்டிருந்தது. ஆனாலும்  ஜனாதிபதிக்கு உள்ள  அதிகாரம் பாவிக்கப்பட்டு  அக் கொலையாளியின் மரணதண்டனை “பொது மன்னிப்பின்” பெயரால் இரத்துச் செய்யப்பட்டு பதவியுயர்வுடன் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டார்.
இவ்வாறு இனப்படுகொலை ஊக்குவிக்கப்படும் படியான சட்ட வலுக்கொண்ட சிறிலாங்காவின் நீதித்துறை, அதிலே அமைச்சர் பதவி பொறுப்பேற்றதிலிருந்து  திரு அலி சவ்ரி அவர்கள் வடக்கு,கிழக்கு வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தை மழுங்கடித்து தனது விசுவாசத்தை காட்டும் வகையில் பல  நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். எனினும்  அவர் நினைத்தது நடக்காததால் தற்போது “ஒரு இலட்சம் ரூபாவும்,மரணச் சான்றிதழும்” வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதிபெற்றிருக்கின்றார்.
அவரின் இச் செயலை வடக்கு, கிழக்கு வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவ் அறிவிப்பானது எமது நீதிக்கான போராட்டத்தினை முற்றிலுமாக உதாசீனப்படுத்துவதுடன், விலைமதிக்க முடியாத எமது உறவுகளின் உயிர்களுக்கு விலைபேச முற்படுவதனது சிங்கள அரசின் உண்மையான முகத்தை மீண்டும் ஒரு முறை வெளிக்காட்டியுள்ளது.
அத்துடன் அவரின் இத்திட்டத்தினையும் நாம் முற்றுமுழுதாகப் புறக்கணித்து சர்வதேசத்தை நோக்கிய எமது நீதிக்கான போராட்டத்தை முனைப்புடன் தொடர்வோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம். குற்றம் இழைத்தவர்கள் பணத்தை கொடுத்து தமது குற்றங்களை மூடி மறைக்க விழைவதினை சர்வதேசசமுகம் மெளனியாக பார்த்துக்கொண்டிருக்கக் கூடாதென வேண்டுகோள் விடுக்கின்றோம்.
மேலும்
“எமக்கு நிதி தேவையில்லை நீதியே தேவை “
என்பதை மீண்டும் மீண்டும்  கூறி சர்வதேச நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர்வோம் என்பதை அழுத்தமாக கூறிக்கொள்கின்றோம் .
“பதவியாசை, பணத்தாசை,பிடித்து அலைபவர்களிற்கு எமது பாசப்போராட்டம் புரியப்போவதில்லை” என்றுள்ளது.

Recommended For You

About the Author: admin