முன்னாள் போராளி இளைஞர்களின் தாக்குதலில் மரணம்.

கையடக்க தொலைபேசியை திருடியதாக,  இளைஞர்களினால் தாக்குதலுக்குள்ளான முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே பகுதியில் வசித்து வந்த ஒரு பிள்ளையின் தந்தையான சிவபாலன் சத்தியபவான் (44வயது) என்ற முன்னாள் போராளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் தனது சித்தியுடன் கங்குவேலி பகுதியில் வசித்து வருகின்ற நிலையில் மதுவுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியை திருடி அதனை விற்பனை செய்து மது வாங்குவதாக குறித்த இளைஞனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற இளைஞர் அந்த நபரை தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான நபர் வீடு திரும்பிய நிலையில், தனக்கு மயக்க நிலை ஏற்பட்டுள்ளதுடன், தலைப்பகுதியில் விறைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், வழமை போன்று குறித்த நபர் உறங்கியுள்ளார், நேற்று மாலை சென்று பார்த்தபோது அவர் மயக்க நிலையில் இருந்ததை அடுத்து வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் மூதூர் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சட்ட வைத்திய நிபுணரின் சோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்த்துள்ளனர்.

குறித்த மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: admin