2009ம் ஆண்டுக்கு முற்பட்ட பொருளாதாரத் தடை காலத்திலும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கவில்லை……! எஸ் ஜீவராஜ்.

2009ம் ஆண்டுக்கு முற்பட்ட பொருளாதார தடை காணப்பட்ட காலத்திலும் இங்கு எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கவில்லை என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் எஸ் ஜீவராஜ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தின் நகரில் அமைந்துள்ள  எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்கலன்களில் எரிபொருட்களை கொடுக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானத்தின் வடமாகாண முகாமையாளர் சிவதரன் கூறியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டம் விவசாய மாவட்டம்.  விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் உழவு இயந்திரம் மற்றும் அரிவு வெட்டும் இயந்திர பயன்பாட்டிற்காகவும் நீண்ட வரிசையில் நின்று பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். இந் நிலையில் விவசாய நடவடிக்கைகளிற்காக கொள்கலன்களிலேயே எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.

இன்று கடற்தொழிலாளர்களிற்கு எரிபொருள் இல்லை. எந்த நேரத்திலும் உதவி செய்யக்கூடிய நிலையில் உள்ள முச்சக்கரவண்டிகள் பல நூற்றுக்கணக்கில் உள்ளன. அவர்களிற்கு எரிபொருள் கிடைக்கவில்லை. எரிபொருள் இல்லாது வீதியில் நிற்கும் வாகனத்திற்கு கொள்கலனில் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இவ்வாறு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் கல்வி வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது. இதேபோன்று எரிபொருள் தட்டுப்பாடும் காணப்படும் நிலையில் நாங்கள் என்ன செய்வது?

2009ம் ஆண்டுக்கு முன்னர் நாங்கள் வாழ்ந்த காலத்திலும், பொருளாதார தடை விதிக்கப்பட்ட காலத்திலும் பெற்றோல், மண்ணெண்ணை, டீசல் என அனைத்தும் இருந்தது. பெற்றோலிய கூட்டுத்தாபனம் செய்யும் மோசமான காரியமாகவே நான் கருதுகின்றேன்.  உங்களால் இந்த மக்களை காப்பாற்ற முடியாவிட்டால் ஜனநாயக முறையில் தேர்தல் ஒன்றை வைத்து புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்ய முடியும்.  பல நாடுகள் உதவி செய்ய தயாராக இருக்கின்றது. வடக்கு கிழக்கில் உதவிகளை செய்து இந்த மக்களை காப்பாற்ற முடியும். இவ்வாறான துன்பங்களை எமது மக்கள் மீது மேற்கொள்ள வேண்டாம் என தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin