மாபெரும் போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் அழைப்பு…..!

எதிர்வரும் 20ம் திகதி மாபெரும் போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி குறித்த அழைப்பினை இன்று ஊடகங்கள் வாயிலாக அறிவித்துள்ளார். குறித்த ஊடக சந்திப்பு இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டத்தினை ஆரம்பித்து எதிர்வரும் 20ம் திகதி ஐந்து ஆண்டுகள் ஆகின்றது. இலங்கை அரசிடம் தீர்வுக்காக கோரி கிடைக்காத நிலையில் சர்வதேசத்திடம் நீதி கேட்டு நாங்கள் போராடி வருகின்றோம்.
இந்த நிலையில் குறித்த நாளன்று மாபெரும் பேரணி ஒன்றினை மேற்கொள்வதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அன்றைய தினம் கடந்த காலங்களில் நாங்கள் போராட்டங்களை மேற்கொள்கின்றபொழுது இருந்த ஒத்துழைப்புக்களை போன்று கிராம மட்ட அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், தமிழ் தேசியத்தை நேசிக்கனிறவர்கள், அரசியல்வாதிகள், அரசியலிற்கு அப்பால் நின்று செயற்படுகின்றவர்கள் என அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த ஊடகங்கள் வாயிலாக முன்வைக்கின்றோம்.
வடக்கு கிழக்கில் இருக்கின்ற அனைத்து தரப்பினரும் இந்த அழைப்பினை ஏற்று குறித்த தினத்தில் இடம்பெறும் மாபெரும் பேரணியில் கலந்துகொண்டு ஆதரவினை வழங்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.
தற்பொழுது உயர்தர பரீட்சைகள் இடம்பெற்ற வரும் நிலையில் குறித்த போராட்டத்திற்கான அழைப்பானது பொருத்தமானதாக இருக்குமா என அவரிடம் வினவியபொழுது, மாணவ செல்வங்களிற்கு எவ்வித இடையூறுகளும் இல்லாது அமைதி வழியாக குறித்த போராட்டத்தினை தாங்கள் முன்னெடுப்புாம் எனவும் அவர் இதன்புாது தெரிவித்திருந்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews