அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.நகரில் சிறைக் கூண்டுக்குள் இடம்பெற்ற விடுதலைப் பொங்கல்….!

நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை(13.01.2022) குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.முற்றவெளியில் விடுதலைப் பொங்கல் நிகழ்வு நடைபெற்றது.

இன்று முற்பகல்-11.30 மணியளவில் யாழ்.நகரில் அமைந்துள்ள நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாலயத்திற்கு அருகில் சிறைக்கூண்டு மாதிரி அமைத்து அதனுள் இடம்பெற்ற நிகழ்வில் பொங்கல் பொங்கிச் சூரியனுக்குப் படைக்கப்பட்டு இலங்கைச் சிறைச்சாலைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகப் பிரார்த்தனை செய்யப்பட்டதுடன் அவர்களின் விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என அரசாங்கத்திடமும் வலியுறுத்தப்பட்டது.

நிகழ்வில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் அரசியல் கைதிகள் உள்ளிட்ட சிலர் அரசியல் கைதிகளின் ஆடைகள் அணிந்து கலந்து கொண்டு பொங்கல் நிகழ்வுகளில் ஈடுபட்டமையை அவதானிக்க முடிந்தது.

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தவத்திரு.வேலன் சுவாமிகள், யாழ்.மறைமாவட்டக் குரு முதல்வர் அருட்திரு. ஜெபரட்ணம் அடிகளார், தமிழ்த்தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மூத்த தமிழ் அரசியல்வாதியுமான எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ்.மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ்.மாநகரசபையின் பிரதி முதல்வர் து.ஈசன், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்மக்கள் கூட்டணியின் இளைஞரணி இணைப்பாளர் கே.கிருஷ்ணமேனன், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் வடமாகாண இணைப்பாளர் சி. இளங்கோவன், யாழ்.மாநகரசபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன், வலி.வடக்குப் பிரதேசசபை உறுப்பினர் ச.சஜீவன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கனகசபை விஷ்ணுகாந், சிறையிலிருந்து முன்னாள் தமிழ் அரசியல் கைதிகள், அரசியல் கைதிகளின் உறவுகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, நிகழ்வில் கலந்து கொண்ட சமயத் தலைவர்கள், அரசியல்வாதிகள், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் தமிழ் அரசியல் கைதிகள், அரசியல் கைதிகளின் உறவுகள் ஆகியோரால் அரசியல் கைதிகளின் உடனடி விடுதலையை வலியுறுத்தி நிகழ்வில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews