மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயா படுகொலை சர்வதேசம் நீதிக்காக செயல்படவில்லை….!பா.அரியநேந்திரன்.

இலங்கை, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களின் ஒருவருமான யோசப் பரராஜசிங்கம் டிசம்பர் 25. 2005 அன்று 12:15 மணியளவில் மட்டக்களப்பு செயின்ற் மேரி தேவாலயத்தில் வைத்து அடையாளம் காணப்படாத ஒருவரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினராகவும், பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினராகவும் இருந்தவர்.

அறுபதுகளில் தமிழரசுக் கட்சி மூலம் அரசியலுக்கு நுழைந்த இவர், தான் பத்திரிகையாளராக பணியாற்றிய காலத்தில் தனது மனைவியார் பெயரில் (சுகுணம் ஜோசப்) கட்டுரைகளை எழுதிவந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினைகளை வெளிக்கொணர இவர் எழுதிய கட்டுரைகள் பல அப்பகுதியில் மிகவும் பிரசித்தமானவை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பத்திரிகையாளர் அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதிலும் முன்னின்றவர் இவர். அந்த அமைப்பின் ஆரம்பத் தலைவரும் இவரே.

1989இல் பல தமிழ் அமைப்புகள் சேர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் பட்டியலில் தேர்தலில் போட்டியிட்ட சமயம் இவரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றார். ஆயினும் அப்போது அவர் அந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

இருந்தபோதிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சாம் தம்பிமுத்து, கொழும்பில் கனடியத் தூதரகத்துக்கு முன்பாக வைத்து தனது மனைவியார் கலா தம்பிமுத்து சகிதம் சுட்டுக்கொல்லப்படவே, அந்த இடத்து நாடாளுமன்ற உறுப்பினராக ஜோசப் நியமிக்கப்பட்டார்.

அதனை அடுத்த தேர்தல்களில் ஜோசப் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்த போதிலும், வடக்கு கிழக்கில் ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகள் காரணமாக கடந்த 2004,பொதுத் தேர்தலில் அவர் தோல்வியடைய நேர்ந்தது.

ஆயினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (தமிழரசுக்கட்சி) சார்பில் தேசியப் பட்டியல் மூலமான உறுப்பினராக அவர் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

தமிழ் மண்ணையும், தமிழ்மக்கைளையும் நேசித்த மாமனிதர்.! தன் நண்பர்களுக்காகத் தன் உயிரையும் தருபவனிடமுள்ளதை விடவும் மகத்தான அன்பு வேறெவரிடமும் இருக்க முடியாது என பைபிளின் மிகவும் அழகிய இந்த வாசகத்திற்கு மிகப் பொருத்தமான ஒரு மனிதர் மறைந்த திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள். அதனால் மாமனிதர் என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

மண்ணையும் மக்களையும் நேசித்த ,குறிப்பாக ஆக்கிரமிப்பாளரின் கொடுமைகள் மிகுந்த கிழக்கு மாகாணத்தில் வாழ்விலும், தாழ்விலும் பங்கெடுத்த ஒரு நல்ல ஆன்மாவின் துடிப்பு ஆயுதமுனையில் அடக்கப்பட்டிருக்கின்றது.

தேசத்தை நேசிப்பவர்களுக்கு மரணத்தைப் பரிசாகக் கொடுப்பது காலகாலமாக இங்கே நடந்து வருகின்றதெனினும் ஜோசப் பரராஜசிங்கத்தின் பலியெடுப்பிற்கு ஆக்கிரமிப்பாளர்கள்; குறித்த நாள், மக்களின் ஈடேற்றத்திற்காகத் தன்னைச் சிலுவையில் ஒப்புக் கொடுத்ததாகச் சொல்லப்படும் யேசுபாலன் பிறந்த நாள் டிசம்பர் 25. அவரின் பலியெடுப்பிற்கு அவர்கள் குறித்த இடம் தேவனின் திருச்சபை.

தமிழினத்தின் அழிவொன்றையே நித்தம் உருப்போடுவதைத் தவிர வேறெந்த சிந்தனையும் அற்றவர்களால் தான் இந்த ஈனச்செயலை அதுவும் இவ்வாறான ஒரு நாளிற்; செய்யமுடியும்.

இத்தகைய ‘விழி திறக்காதவர்களுக்காக ஜோசப் தன் விழிகளை மூடியிருக்கிறார்’. மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்பத்திரிகையாளனாகத் தொடங்கி தமிழபிமானத்தால் அரசியல்வாதியாகி, வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெறுகின்ற மனிதஉரிமை மீறல்களை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் என்ற வகையில் அரசின் கவனிப்பைப் பெற்றவர் திரு.ஜோசப் பரராஜசிங்கம்.

தமிழரசுக்கட்சி,தமிழர் விடுதலைக்கூட்டணி என்று தனது அரசியற்பணியை ஆரம்பித்து ஆயதப்போராட்டம் முனைப்புப் பெற்ற காலம்வரை பல தசாப்தங்களைக் கண்டவர்.

நெருக்கடியான சூழலில் ஆங்கிலப் புலமை வாய்ந்த திரு.ஜோசப்பின் குரலை நிறுத்துவது சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகமிக அவசியமானதொன்றாக இல்லாவிடின் கிறிஸ்துமஸ் தினத்தையும் புனித மரியாள் தேவாலயத்தையும் கொலைக்காகத் தேர்வு செய்திருக்கமாட்டார்கள்.

ஒரு நாடாளுமன்ற ஜனநாயக வாதியாகவும் மனித உரிமைகள்வாதியாகவும் பார்க்கப்பட்ட திரு.ஜோசப் பரராஜசிங்கம் ஐயா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உலக நாடுகளோ, சர்வதேச அமைப்புகளோ அனுதாபம் கவலையை மட்டுமே வெளியிட்டது நீதிக்காக செயல்படவில்லை.

ஜனநாயகப் பண்புகளுக்கமைய நாடாளுமன்றம் சென்று அடிவாங்கிய வரலாறு தமிழினத்திற்கு நிறையவே உண்டு.

காலிமுகத்திடலில் அமைதியாகக் கூடிய சத்தியாக்கிரகிகள் மீது தடியடிப்பிரயோகம் செய்தவரலாறை கொண்ட தமிழ்தேசிய மக்கள் பிரதிநிதிகள் 2004 தொடக்கம் 2009, வரை தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் உட்பட மாமனிதர் ரவிராஜ், மாமனிதர் சிவனேசன், ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வரலாறு இலங்கையின் ஆட்சி எப்படிப்பட்டது என்பதை சர்வதேசம் புரியவேண்டும்.

இவ்வாறான மாமனிதர்களுடைய படுகொலை மூலம் மீள அரங்கேறியுள்ளன. மணலுள் தலை புதைத்த தீக்கோழிகளாய் உண்மையான களநிலையைக் காணமறுக்கும் அல்லது மறக்கும் சர்வதேச அபிப்பிராயம் குறித்த கவலைகளை ஒதுக்கிவிட்டு மண்ணுக்காய் மரித்தவர்களின் அபிலாசைகளைக் கணக்கிலெடுத்து முன்னகர்வதே நாம் அவர்களுக்குச் செய்யும் இதயபூர்வமான அஞ்சலியாகும்.

பா.அரியநேத்திரன்

Recommended For You

About the Author: Editor Elukainews