விடுமுறை வழங்காததால் விபரீதம்: அம்பாறையில் பரிதாபமாக பறிபோன நான்கு உயிர்கள்!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 பொலிசார் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
இதன் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் ரி56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் மூன்று பொலிசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்வடைந்துள்ளது.
குறித்த பொலிஸ் நிலையம் விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் மொனராகலையைச் சேர்ந்த பொலிஸ் சாஜன் குமார என்பவர் வீடு செல்வதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் விடுமுறை கோரியுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு பொலிஸ் பொறுப்பதிகாரி தெய்கம விடுமுறை வழங்காததையடுத்து ஆத்திரமடைந்த பொலிஸ் சாஜன், சம்பவதினமான நேற்று இரவு 11.30 மணியளவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வாகனத்தில் ஏறி ரோந்து நடவடிக்கைக்கு செல்வதற்கு தயாராகி இருந்தபோது அவர் மீது ரி 56 துப்பாக்கியால் சரமாரியாக துப்பாகிபிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து அவரை தடுக்க முற்பட்ட பொலிஸார் மீது, அவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில், சம்பவ இடத்தில் 3 பொலிஸார் உயிரிழந்ததுடன், பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ள நிலையில், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பொலிஸ் சாஜன் அங்கிருந்து மோட்டர் சைக்கிளில் தப்பிச் சென்ற நிலையில், மொனராகலை அத்திமலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்றம் நிலவுவதுடன், மக்கள் மத்தியில் அச்ச நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர்களான நவீனன், துசார, பிரபுதன் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு கிழக்கு மாகாணா சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சென்று நிலமையை ஆராய்ந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு பணித்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews